Home சினிமா கமல் – ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

கமல் – ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

28
0

★ சுமார் இருபது வருடங்களுக்கு முன் ஏவி.எம். ஸ்டூடியோவில் செட்டுக்கு வெளியே ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. அங்கு துருதுருப்பான சிறுவன் ஒருவன் பிரபல நடிகர்களைப் போல நடித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.

★ சுற்றியிருந்தவர்கள் அவனது நடிப்பைப் பார்த்து வியந்து கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். அந்தச் சிறுவன் வேறு யாரும் அல்ல; அப்போது களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வந்திருந்த கமலஹாசன்தான்.

★ அந்த நாளிலிருந்து இன்றுவரை கமலின் வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன். அது குருட்டாம்போக்கு அதிர்ஷ்ட ஜாக்பாட் அல்ல. கடுமையான உழைப்பின் வெற்றி.

★ புரசைவாக்கம் எம்.சி.டி. பள்ளியில் கமல் படிக்கும்போது நானும் கமலும் சேர்ந்து `மோகன விலாஸ்’ என்ற நாடகத்தில் நடித்திருக்கிறோம். அப்போதே கமலிடம் ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருக்கும்.

★ பல ஆங்கிலப் படங்களைப் பார்த்து விட்டு வந்து அது போல நடித்துக் காட்டுவார். இப்போதும் அதற்குக் குறைவில்லை!

★ படித்துவிட்டு மற்றவர்களைப் போல எங்காவது வேலைக்குப் போயிருக்கலாம். ஆனால், விடாப்பிடியாக சினிமாவில் மீண்டும் நுழைந்து – டான்ஸ் உதவியாளராகப் பணியாற்றி – பரதநாட்டியம் கற்றுக் கொண்டு – உடலையும் ஒழுங்காக வளர்த்துக் கொண்டு – படிப்படியாக முன்னேறிக் கதாநாயகன் ஆனார். பாராட்ட வேண்டிய விடாமுயற்சி!

Kamal Haasan – A Reporter’s Diary

★ நடிகரான பிறகு சிலருக்கு ஒருவித ‘பந்தா’ – ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு போகும் வழக்கம் – இதெல்லாம் வரும். ஆனால், கமலுக்கு இதெல்லாம் துளிக்கூடக் கிடையாது.

★ எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பத்திரிகைக்காக நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். ஏன், பல பேட்டிகளை நான் டெலிபோனில் பேசியே முடித்திருக்கிறேன்.

★ முன்பு விகடனில் கமல் – ஜெமினி கணேஷ் `லடாய்’ ஒன்று வந்து வாசகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

★ “இப்படி ஒரு காரசாரக் கடிதக் கோவையை மூன்று நான்கு இதழ்களுக்கு எழுதலாம். நான் ஜெமினி சாரோடு சண்டை போடுகிறேன். அவரும் என்னைத் திட்டுவது போல் திட்டட்டும். கடைசியில் நாங்கள் இருவரும் சேர்ந்து `காண்ட்ரவர்ஸிக்குத்தான் இப்போது மதிப்பு. அதில்தான் பெரிய பப்ளிசிடி கிடைக்கிறது. உண்மையில் எங்களுக்குள் பகைமை கிடையாது. நாங்கள் நண்பர்களே என்று சொல்லி முடிக்கலாம்’ என எனக்கு ஐடியா கொடுத்ததே கமல் தான்.

★ அது மட்டுமல்ல; அதை இரண்டு மூன்று வாரங்களுக்கு ரகசியமாக யாரிடமும் சொல்லாமல் இருந்தார் கமல்.

★ முதலில் ஜெமினி கணேஷ் கமலைத் திட்டி எழுதியதும் நான் கமல் வீட்டிற்குப் போனேன். கமலின் சகோதரர் வக்கீல் சாருஹாசன் என்னிடம், “கமலைப் பற்றி இப்படிக் கன்னாபின்னாவென்று எழுதியிருக்கும் ஜெமினி மீது வழக்குப் போடலாமா என்று யோசிக்கிறேன்!” என்றார்.

★ கமல் தன் சகோதரரிடம்கூட ரகசியத்தைச் சொல்லவில்லை என்று அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

★ பிரபல நட்சத்திரமான பிறகு பலர் கமலிடம் உதவி கேட்டு வந்திருக்கின்றனர். கோவில், கும்பாபிஷேகம் என்று இவரிடம் உதவி பெற்றவர்களைவிட பள்ளிச் சம்பளம், காலேஜ் சம்பளம், புத்தகம் வாங்க என்று பணம் பெற்றவர்களே அதிகம்.

★ சினிமா உலகை ஒரு காலத்தில் அறுவை ஜோக்குகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. நடிகர் ஸ்ரீகாந்த் `அறுவை மன்னர்’ என்று பெயர் வாங்கியவர். கமலுக்கு `அறுவை இளவரசர்’ என்ற பெயர்.

★ எங்காவது கமல் நம்மைப் பார்த்து விட்டால் போதும்; “உங்களுக்குத் தெரியுமா? சஃபையர் தியேட்டர் கதவை மாடு தின்னுடுச்சே..! ஏன்னா, அதிலே `புல்’னு போட்டிருந்தது” என்பார். இப்படித் தினமும் அறுத்துக் கொண்டிருப்பார் கமல். ஆனால் அதில் சொந்தக் கற்பனை நிறைய இருக்கும்.

★ செட்டில் நடிக்கும்போது டைரக்டர் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகக் கற்பனை செய்து கொண்டு நடிப்பார். அதுவும் மிக இயற்கையாக இருக்கும்.

★ புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று துடிப்பவர். பழகுவதற்கு மிக நல்லவர். மரியாதை கொடுத்து மரியாதை வாங்கத் தெரிந்தவர்.

– பாலா

(30.11.1980 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

கமலின் வளர்ச்சி… குருட்டாம்போக்கு அதிர்ஷ்ட ஜாக்பாட் அல்ல!

Previous articleஸ்ரீதேவி – ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
Next articleA.R.Rahman- Vairamuthu: புது இசை; கவித்துவ வரிகளில் அமைந்த க்ளாசிக் பாடல்கள்| PhotoStory